ஜானக சமன் குமார மற்றும்

விடுபட்ட தேதி 19/11/1989
இடம் காணவில்லை பன்வில வீட்டிலிருந்து

ஜானக சமன் குமார மற்றும் சந்திம தேரர் (சமிந்த சிறீநாத் வீரசிங்க) எனக்கு இரண்டு மகன்மார் இருந்தனர்: ஜானக சமன் குமார எனது மூத்த மகன், சமிந்த சிறிநாத் வீரசிங்க எனது இளைய மகன். எனது இளைய மகனான சமிந்த ஒரு துறவியாகத் திருநிலைப்படுத்தப்பட்டு சமிந்த தேரர் என அழைக்கப்பட்டார். எனது இரண்டு மகன்மாரும் 18 வயதும் 17 வயதும் நிறைந்தவர்களாக இருந்த போது எமது பன்வில வீட்டில் இருந்து கடத்தப்பட்டனர்.
1989 நவம்பர் 19 ஆம் திகதி பிற்பகல் சுமார் 11 மணியளவில் பொலிசார் எனக் கூறிக்கொண்டு இரண்டு பேர் எமது வீட்டுக் கதவைத் தட்டினர். நான் கதவைத் திறந்த போது வெளியில் ஒரு கும்பல் நிற்பதைக் கண்டேன். அவர்கள் வீட்டினுள் பலவந்தமாக நுழைந்து எனது இரண்டு மகன்மாரையும் பற்றியிழுத்து ஒரு வாகனத்தில் கூட்டிச் சென்றனர். அவர்கள் எம்மை வெளியில் வர அனுமதிக்கவில்லை.
சில நிமிடங்களின் பின்னர், தொடராகச் துப்பாக்கி வெடிச் சத்தங்களை நான் கேட்டேன். அவர்கள் எனது மகன்மாரைச் சுட்டுவிட்டனரோ என நான் பயந்தேன். ஆனால் எனது மகன்மாரை அவர்கள் எமது அயலவர் ஒருவரின் வீட்டின் முன் மண்டியிடச் செய்து அவர்களின் நண்பர்களின் பெயர்களைக் கூறுமாறு கூறியதாக நான் பின்னர் அறிந்துகொண்டேன். அன்றிரவு, எமது கிராமத்தில் இருந்து இன்னும் 5 பேரை அவர்கள் கடத்திச் சென்றனர். இவ்வாறு கடத்தப்பட்ட ஏழு பேரில் இருவர் சில காலங்களின் பின்னர் திரும்பிவிட்டனர்.
கடத்தல் நிகழ்ந்து பத்து நாட்களின் பின்னர், தலையில்லாத முண்டமொன்று எமது கடையின் முன் போடப்பட்டிருந்தது. அந்த நபர் ஏழே நாட்களான ஒரு பெண் சிசுவின் தந்தையாவார். எனது பிரதேசத்தினைச் சேர்ந்த பலரும் இவ்வாறு கோரமாகக் கொல்லப்பட்டனர். இது ஜேவிபியின் வேலை என்று சிலர் குறிப்பிட்டனர்.
நான் பன்வில பொலிசுக்கும் பல இராணுவ முகாம்களுக்கும் சென்றேன். ஆனால் ஒரு போதும் எனக்கு எத்தகவல்களும் கிடைக்கவில்லை. 1990 ஆம் ஆண்டுதான் பொலிசார் எனது முறைப்பாடுகளைப் பதிவுசெய்தனர்.
ஜானக கடத்தப்படுவதற்கு முன்னர், அவர் பஸ் நடத்துனர் ஒருவருடன் வாக்குவாதப்பட்டார் என்றும் அந்த நடத்துனர் ஜானகவைப் பார்த்து ஜானக மூன்று நாட்கள்தான் உயிரோடு இருப்பான் என அச்சுறுத்தினார் என்றும் நான் கேள்விப்பட்டேன்.
இந்தச் சம்பவத்திற்குப் பழிவாங்குவதற்கு ஜேவிபியே இதனைச் செய்திருக்க வேண்டும் என நான் நினைத்தேன் ஏனெனில் அந்நாட்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றன. எனது இரண்டு மகன்மாருடன் சேர்த்து எமது கிராமத்தைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளை ஒரு ஜீப்பில் யாரால் அழைத்துச் சென்றிருக்க முடியும்? பொலிசா அல்லது இராணுவமா?
எனது மகன்மார்கள் இறந்துவிட்டனரா அல்லது உயிரோடு உள்ளனரா என்பது எனக்கு இன்னும் நிச்சயமாகத் தெரியாது. அரசாங்கம் எனக்கு 30,000 ரூபா வழங்கி இரண்டு மகன்களுக்காகவும் இறப்புச் சான்றிதழ் வழங்கியது. நான் அந்தப் பணத்தினை ஒரு துறவிக்கு நன்கொடையாக வழங்கினேன்.
எனது இரண்டு பிள்ளைகளுக்கும் என்ன நடந்தது என்பதை அறியாது நாம் இந்த நாட்டில் வாழத்தான் வேண்டுமா?
அசோக வீரசிங்கவின் வாக்குமூலம், ஜானக சமன் குமாரவினதும் சமிந்த தேரரினதும் தாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *